கார்த்திகை தீப திருவிழாவில் புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா மகாதீப கொப்பரையும் மலை உச்சிக்கு சென்றது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குதிரை வாகனத்தில் அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் 9-ம் நாளான நேற்று மதியம் 12 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இன்று மகா தீபம்

திருவிழாவின் சிகரமாக மகா தீபம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக கோவிலில் மகா தீபத்தையொட்டி கரும்பு மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் நேற்று கோவிலில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உள்பட போலீசார் உடனிருந்தனர்.


Next Story