ஆதிமாரியம்மன் கோவிலில் சண்டி ஹோமம்
ஆதிமாரியம்மன் கோவிலில் சண்டி ஹோமம் நடந்தது.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காகவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும், நோய் நொடியின்றி வாழவும் வேண்டி நேற்று சண்டி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் தேவானுக்ஞை, எஜமான் அனுக்ஞை, சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாஜனம், கணபதி ஹோமம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் 64 யோகினிகள், 64 பைரவர்கள் பலி, தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, கலச பூஜை நடைபெற்றது.இதைத்தொடர்ந்து சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் 96 வகையான பொருட்களை கொண்டு ஹோமமும், அதைத்தொடர்ந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர் ஆதிமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் குருக்கள் செய்திருந்தனர்.