தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
எச்சரிக்கை இல்லை
நேற்று மதியம் 1 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 2 செ.மீ. மழை அளவும், விழுப்புரம் மாவட்டம் வளத்தி, மரக்காணம், வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ. மழை அளவும் பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.