தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு
இலங்கை கடற்கரையையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் (புதன்கிழமை) உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இது அதற்கடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அனேக இடங்களில்...
இது அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ வலுவடைவது பற்றி நாளை மறுநாள்தான் கணிக்க முடியும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த வானிலை நிகழ்வை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் 9-ந் தேதியில் இருந்து அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வருகிற 10-ந் தேதியை பொறுத்தவரையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், இரணியல் 8 செ.மீ., பரங்கிப்பேட்டை, ராமேஸ்வரம், மரக்காணம் தலா 5 செ.மீ., கொத்தாவாச்சேரி, கொள்ளிடம், தங்கச்சிமடம், திருப்பூண்டி, வேளாங்கண்ணி, கடலூர், செம்மேடு, சாத்தூர், காஞ்சீபுரம் தலா 4 செ.மீ., ஸ்ரீமுஷ்ணம், பாம்பன், புவனகிரி, கீழ் அணைக்கட்டு, மண்டபம், சேத்தியாத்தோப்பு, மணல்மேடு, ராமநாதபுரம் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.