இன்று காலை 7 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் மிகவும் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 14-ந்தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, கடந்த 2 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 7 மணி வரை 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) முதல் 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழ்நாட்டில் மழை சற்று குறைந்து, அதன் பின்னர் மீண்டும் 25-ந்தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் அது எந்த பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருக்கும் என்பது வரக்கூடிய நாட்களில் தெரிய வரும்.
வடகிழக்கு பருவமழை பொதுவாக டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும். சில நேரங்களில் ஜனவரி மாதம் வரை நீடிக்கும். அந்த வகையில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டு இருக்கிறது.