8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு


8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய உள்ளது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (சனிக்கிழமை) முதல் 25ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், 25-ம் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் சில இடங்களில் பருவமழை தீவிரம் அடைந்தாலும், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story