தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: தயார்நிலையில் பேரிடர் மீட்பு படை வீரர்கள்


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: தயார்நிலையில் பேரிடர் மீட்பு படை வீரர்கள்
x

தேனி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் 23-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 22-ந் தேதி வரையில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக 'சிவப்பு' எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் (செவ்வாய்க்கிழமை) விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இன்று, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நாளை மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வருகிற 22-ந் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வருகிற 23-ந் தேதி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வெப்பநிலையை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் இயல்பைவிட குறைந்தே காணப்படும். குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, கேரளா கடலோர பகுதி, லட்சத்தீவு-மாலத்தீவு பகுதி, தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு வருகிற 23-ந் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பேரிடர் மீட்பு படை வீரர்கள் அனுப்பிவைப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் சுமார் 2 கோடி செல்போன் எண்களுக்கு பொதுவான முன்னெச்சரிக்கையாக குறுந்தகவல்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள், கன்னியாகுமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின்போது இடி, மின்னல் தாக்கியதில் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், 15 கால்நடைகள் கனமழை காரணமாக இறந்திருப்பதாகவும், 7 குடிசைகள், வீடுகள் சேதம் அடைந்திருப்பதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.


Next Story