கள்ளக்குறிச்சி அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கள்ளக்குறிச்சி அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.
கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் சுமார் 2 கோடி செலவில் நடைபெற்றது. இதையடுத்து இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 5-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, பிரவேச பலி, முதல் கால யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் நூதன விக்ரகங்களுக்கு கண் திறத்தல், சங்கல்பம், 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை, கோபுர கலச ஸ்தாபனம், விசேஷ திரவிய ஹோமம், தீபாராதனை நடந்தது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.