கீரப்பாளையம் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு
அதிகாரிகள் வராததால் கீரப்பாளையம் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.
புவனகிரி:
கீரப்பாளையம் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்தது. இதில் பங்கேற்பதற்காக ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், துணை தலைவர் காஷ்மீர் செல்விவிநாயகமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் வந்தனர். ஆனால் பகல் 11.30 மணி வரை அதிகாரிகள் யாரும் கூட்டதுக்கு வரவில்லை. இதனால் ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது பற்றி விசாரித்தபோது, கீரப்பாளையம் ஒன்றியத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக கடலூர் கூடுதல் கலெக்டர் மதுபாலன் வந்திருந்தார். எனவே அனைத்து அதிகாரிகளும் அங்கு சென்று விட்டனர். அதனால் அவர்களால் கூட்டத்துக்கு வரமுடியவில்லை என்பது தெரிந்தது. இதனிடையே நேற்று நடைபெற இருந்த ஒன்றியக்குழு கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் கடந்த 17.3.2023 அன்றும் கலெக்டர் ஆய்வு செய்ய வந்ததால், அன்று நடைபெற இருந்த ஒன்றியக்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.