காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய சப்பரபவனி
காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய சப்பரபவனியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தொண்டி,
காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய சப்பரபவனியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
திருவிழா
திருவாடானை தாலுகா காரங்காடு புதுமை புகழ் தூய செங்கோல் மாதா ஆலய திருவிழா சப்பரப்பவனி நடைபெற்றது. மிகப் பழமை வாய்ந்த இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் நவநாள் திருப்பலி, சிறப்பு மறையுறை மாதா மன்றாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி பங்குத்தந்தை அருள்ஜீவா தலைமையில் நடை பெற்றது. இதில் அருட்தந்தையர்கள் கலந்துகொண்டு திருப்பலியை நிறைவேற்றினர்.
அதனை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் தூய செங்கோல் மாதா, புனித செபஸ்தியார், புனித அந்தோணியார் ஆகியோர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு இறை ஆசீர் வழங்கினர். இதனையொட்டி வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொடி இறக்கம்
ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி, சப்பரபவனி, கொடி இறக்கம் நடைபெற்றது. இதில் காரங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.