ஆடி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்


ஆடி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 31 July 2022 10:05 PM IST (Updated: 31 July 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுத்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனிடையே இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 23-ந்்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

திருவிழாவில் 9-வது நாளான நேற்று காலை அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பர்வதவர்த்தினி அம்பாள் கோவிலின் கிழக்கு வாசல் நிலையில் அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தேரில் எழுந்தருளினார்.

ஆடிப்பூரம்

தொடர்ந்து தேரின் வடத்தை கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். கிழக்குவாசல் பகுதியில் இருந்து தொடங்கிய அம்பாள் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து கோவிலின் நான்கு ரத வீதிகளை சுற்றிநிலைக்கு வந்தது.

அம்பாள் தேரின் முன்பாக சிவனடியார்கள் மேளதாள வாத்தியங்கள் வாசித்தபடியும் யானை தந்தம் மற்றும் சங்குகளை வைத்து ஊதிய படியும், நடனமாடியபடி வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. திருவிழாவின் 10-வது நாளான இன்று ஆடிப்பூரத்தையொட்டி காலை 9 மணிக்குமேல் அம்பாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 12.30 மணிக்கு சிவதீர்த்தத்தில் அம்பாள் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

நடை திறப்பில் மாற்றம்

திருவிழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் 3 மணிக்குள் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3-ந் தேதி இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8-ந் தேதி சாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவடைகிறது.

ராமேசுவரம் கோவிலில் நாளை ஆடிதபசு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடையானது அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு 3 மணி முதல் 3:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து கால பூஜைகள் நடைபெற்று காலை 6 மணிக்கு மேல் பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் கோவில் நடை 6 மணிக்கு சாத்தப்படும். தபசு மண்டகப்படிக்கு அம்பாள் எழுந்தருள்வதையொட்டி நாளை காலை 6 மணியில் இருந்து இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராடவும் மற்றும் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story