தேனி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு சான்றிதழ்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு சான்றிதழை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களை கவுரவிக்கும் வகையில், 'பெண் குழந்தை பெற்றதற்காக மனமார்ந்த வாழ்த்துகள்' என்ற வாசகம் அடங்கிய சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் வழங்கினார். மேலும் தாய்மார்களுக்கு, சத்தான பழவகைகள், சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் பிறந்த குழந்தைகளுக்கான பெட்டகம், துணி பைகள், மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை கலெக்டர் வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர் சியாமளா தேவி, தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, மகப்பேரியல் தலைமை பேராசிரியர் சாந்தா விபாலா உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிவில் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், "தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரும், தூய்மை பணியாளர்களுக்கான மேலாளரும் தங்களை பணியில் இருந்து நிறுத்தி விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். இதேபோல் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்களும் மனு கொடுத்தனர்.