கலைஞர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு


கலைஞர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலை பண்பாட்டுத்துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசை கலெக்டர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக பாராட்டுச்சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான கலைஞர்கள், குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான கலைஇளமணி விருதுபெற்ற பரதநாட்டிய கலைஞர் தர்ஷினி, சிலம்பாட்ட கலைஞர் பேரறிவாளன், குரலிசை கலைஞர் யோகிஸ்ரீராம் ஆகியோருக்கு கலைஇளமணி சான்றிதழ், தலா ரூ.4 ஆயிரம் ரொக்கமும், 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கான கலை வளர்மணி விருதுபெற்ற பம்பை உடுக்கை கலைஞர் வீரன், தவில் கலைஞர் சரவணன், தெருக்கூத்து கலைஞர் கோவிந்தராஜ் ஆகியோருக்கு சான்றிதழும், தலா ரூ.6 ஆயிரம் ரொக்கமும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைச்சுடர்மணி விருது பெற்ற மேடை நாடக கலைஞர் ராஜவேல், தெருக்கூத்து மற்றும் மிருதங்க கலைஞர் குணபூசனம், தவில் கலைஞர் சசிக்குமார் ஆகியோருக்கு சான்றிதழும் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கமும், 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட கலை நன்மணி விருது பெற்ற ஆர்மோனிய கலைஞர் மனோகரன், மேடை நாடக கலைஞர் வேல்முருகன், நாதஸ்வர கலைஞர் தண்டபானி ஆகியோருக்கு சான்றிதழும் தலா ரூ.15 ஆயிரம் ரொக்கமும், 66 வயதிற்கு மேற்பட்ட கலை முதுமணி விருது பெற்ற நாதஸ்வர கலைஞர் வைத்தியநாதன், பம்பை உடுக்கை கலைஞர் மாரிமுத்து, மேடை நாடக கலைஞர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு சான்றிதழும் தலா ரூ.20 ஆயிரம் ரொக்கமும் கலெக்டர் மோகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கலை பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குனர் நீலமேகம், விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் ஈஸ்வரன் பட்டாத்ரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story