விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம்
கிருஷ்ணகிரியில் நடந்த 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் நிறைவு விழாவில், சிறந்த மா உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் நடந்த 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் நிறைவு விழாவில், சிறந்த மா உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
மாங்கனி கண்காட்சி நிறைவு விழா
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. இதன் நிறைவு விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி சிறந்த அரசுத்துறை அரங்குகள் மற்றும் சிறந்த மா உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த மாங்கனி கண்காட்சியில் தினமும் கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. தோட்டக்கலைத்துறை சார்பாக அனைத்து வகையான மா ரகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர்.
ரூ.20 கோடி வருவாய்
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுக்கு 6.15 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 32 ஆயிரத்து 451 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுக்கு 2 லட்சத்து 59 ஆயிரம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் உற்பத்தி திறன் ஹெக்டேருக்கு 7.2 மெட்ரிக் டன் ஆகும். இதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூ.20 கோடி விவசாயிகளுக்கு வருவாயாக கிடைக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெங்களூரா மா வகை மிக அதிக அளவில் விளைகிறது. பெங்களூரா மற்றும் அல்போன்சா மாம்பழ வகைகளில் மட்டுமே பெரும்பாலும் பழக்கூழ் தயாரிக்கப்படுகிறது. உலகத்தில் 63 நாடுகள் மா பயிரிட்டாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பெங்களூரா மாம்பழ கூழுக்கு உலக வணிக அரங்கில் சிறப்பான இடம் உண்டு. மாவட்டத்தில் தற்போது 65 மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் சுமார் ரூ.125 கோடி மதிப்பிலான மாங்கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பரிசு-சான்றிதழ்
இந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறைக்கு சிறப்பு பரிசுகளாக பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. கண்காட்சியில் சிறந்த அரங்குகள் அமைத்த காவல்துறைக்கு முதல் பரிசும், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு 2-ம் பரிசும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்திற்கு 3-ம் பரிசும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் மின்சாரத்துறைக்கு ஆறுதல் பரிசாக பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
இதே போல் தோட்டக்கலைத்துறை சார்பாக மா கண்காட்சியில் மா ரகங்கள் காட்சிப்படுத்திய போட்டியாளரான சேலத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசனுக்கு முதல் பரிசும், கொடிதிப்பனப்பள்ளியை சேர்ந்த விவசாயி ராமமூர்த்திக்கு 2ம் பரிசும், பர்கூர் விவசாயி கோவிந்தசாமிக்கு 3-ம் பரிசும், மா ரகங்களை காட்சிப்படுத்திய 16 மா உற்பத்தி விவசாயிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. இதேபோல் கண்காட்சியில் இடம் பெற்ற 32 அரசு துறைகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, உதவி கலெக்டர் சத்தீஸ்குமார், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, பையூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் பரசுராமன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.