நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
x

கீழ்வேளூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இவர்களிடம் 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இவர்களிடம் 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசுக்கு கடிதம்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அறுவடை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தொடர் மழை காரணமாக, 20 முதல் 22 சதவீதம வரை நெல்லின் ஈரப்பதம் உள்ளது.இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்களிலும், சாலையிலும் நெல்லைக் கொட்டி காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க கோரி மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது.

மத்திய குழுவினர் ஆய்வு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஐதராபாத் மத்திய உணவுக் கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குனர் எம். இசட்கான் தலைமையில் இந்திய உணவுக் கழகத்தின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தொழில்நுட்ப அலுவலா் யூனுஸ், இந்திய உணவுக் கழக தரக்கட்டுப்பாடு உதவி பொது மேலாளர் குணால் குமார், தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மேலாளர் செந்தில் ஆகியோா் கொண்ட மத்திய குழுவை அமைத்து நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

அதன்பேரில் மத்திய குழு நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அப்போது கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் வைத்திருந்த மூட்டைகளில் இருந்து நெல்லை மாதிரி எடுத்து ஈரப்பதம் குறித்து பரிசோதனை செய்தனா்.

விவசாயிகள் கோரிக்கை

தற்போது பெய்து வரும் தொடா் மழையால் நெல் நனைந்து வருகிறது. இதை காய வைத்தாலும் நெல்லின் ஈரப்பதம் குறைவதில்லை. இதனால் நீண்ட நாட்களாக கொள்முதல் நிலையத்திலேயே காத்து கிடக்கவேண்டிய நிலை உள்ளது.

நெல் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் நெல்லின் ஈரப்பதம் குறித்து முடிவெடுக்கும் உரிமையை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.

நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின் போது நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நாகை முதுநிலை மண்டல மேலாளர் ராஐராஜன், தாசில்தார் ரமேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.


Next Story