உணவு உற்பத்தி, பதப்படுத்தும் தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரை மத்திய அரசு மானியம்


உணவு உற்பத்தி, பதப்படுத்தும் தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரை மத்திய அரசு மானியம்
x

உணவு உற்பத்தி, பதப்படுத்தும் தொழில் செய்வோருக்கு ரூ.10 லட்சம் வரை மத்திய அரசு மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

உணவு உற்பத்தி, பதப்படுத்தும் தொழில் செய்வோருக்கு ரூ.10 லட்சம் வரை மத்திய அரசு மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

நிதி உதவி சிறப்பு திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன துறையின் சார்பில் நிதி உதவி அளிக்கும் பிரதமரின் 5 ஆண்டு சிறப்பு திட்டம் கலெக்டர் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களை வலுப்படுத்துதல், புதிய நிறுவனங்களை தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படும்.

ரூ.10 லட்சம் மானியம்

மேலும் தனி நபர், உணவு பதப்படுத்தும் தொழிலில் புதிதாக ஈடுபடும் குறு தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் இட்லி, தோசை மாவு தயாரித்தல், சிறுதானியப் பொடிகள் மற்றும் தின்பண்டங்கள் உற்பத்தி செய்தல், மரச்செக்கு எண்ணெய் தயாரித்தல், உலர் மீன் பதப்படுத்துதல், கடல் உணவு ஊறுகாய் தயாரித்தல், நண்டு இறைச்சி பதப்படுத்துதல், உண்ண தயாராக உள்ள உணவுகளை உற்பத்தி செய்தல், மசாலா தூள் உற்பத்தி செய்தல், பால் பொருட்கள் உற்பத்தி செய்தல், கரும்புச்சாறு உற்பத்தி செய்தல், பேக்கரி பொருட்கள் உற்பத்தி செய்தல் போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படும்.

இந்த நிதி உதவியை பெற உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஒரு குடும்பத்தில் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க விரும்புவோர், https://pmfme.mofpi.gov.in/ என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்கள் அறிய ராமநாதபுரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம்.

இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர்ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story