குழந்தைத்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ் பணிகளை மத்திய அரசு முடிக்க வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்


குழந்தைத்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ்  பணிகளை மத்திய  அரசு முடிக்க வேண்டும்-  அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை,

போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது ,

தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 57,84,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து என்பது ஒரே தவணையில் அளிக்க கூடிய மருந்தாகும். இந்தியாவில் குடும்ப நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

நாகை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

மரங்கள் அகற்றப்படவில்லை அதனால்தான் மதுரை எய்ம்ஸ் கால தாமதம் என குழந்தைத்தனமான, போலித்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.


Next Story