மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்துக்கிடக்கும் நிலையில், விலை மதிப்பற்ற மருத்துவ இடங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

இத்தகைய பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு அகில இந்திய ஒதுக்கீடு முறையை ரத்து செய்வது தான். 1980-ம் ஆண்டு தொடக்கத்தில் அகில இந்திய ஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போது பல மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை.

அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் படிப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன்தான் அகில இந்திய ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தேவை இல்லை.

எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்துசெய்யவேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story