சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு


சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு
x
தினத்தந்தி 29 Jun 2023 6:55 PM IST (Updated: 30 Jun 2023 3:43 PM IST)
t-max-icont-min-icon

குன்னாங்கல்பாளையத்தில் சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்த அந்த பகுதி பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர்

சாய ஆலை

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையத்தில் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சாய ஆலை அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் அருகில் 40 மீட்டர் சுற்றளவில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

மேலும் சாய ஆலை அமைய உள்ள இடம் குடியிருப்புகளுக்கு அருகிலும் இருக்கிறது. இதனால் சாய தொழிற்சாலை இயங்கும் சத்தமும், பாய்லர் சத்தமும், ரசாயன நாற்றமும், நிலக்கரி துகள்களும், பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளையும், குடியிருப்பு பகுதி மக்களையும் பாதிக்கும். அத்துடன் ஒடைக்கு அருகிலேயே சாய ஆலை இருப்பதாலும் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாய ஆலை அமைக்க கூடாது என்று 19-12-2019 அன்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, பள்ளி கல்வித்துறை, கலெக்டர், திருப்பூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. கடந்த 26-1-2020 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆட்சேபனை மனு கொடுக்கப்பட்டு அதற்காக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

பணிகள்

ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஒரு மாதமாக சாய ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கலெக்டர், திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாசில்தார் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் கடந்த 20-ந்தேதி கலெக்டர், தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு கிராம சபை தீர்மானத்தை மீறி சாய ஆலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கு வழங்கிய வரைபடம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கி இருந்தால் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், சாய ஆலை அமைக்க எந்த விதமான அனுமதியும் வழங்க வேண்டாம் என்றும் மனு கொடுத்துள்ளார்.

இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டுதல், உள்ளிருப்பு போராட்டம், தொடர் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

எனவே இது குறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story