கோவில்களில் செல்போனுக்கு தடை
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. பாதுகாப்பு அறைகள் அமைத்து டோக்கன் வழங்கி செல்போன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அபிஷேகம், பூஜை ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்வதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இது ஆகம விதிகளுக்கு முரணானது. எனவே கோவிலுக்குள் செல்போன் கொண்டுவர தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
வழக்கு
இது தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி கோவில் அர்ச்சகர் சீதாராமன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, "தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். திருப்பதி கோவிலின் வாசலில் கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் நின்று செல்பி எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சுதந்திரம் அளிக்கிறார்கள். கோவில்கள் சுற்றுலாத்தலங்கள் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று கருத்து தெரிவித்து இருந்தது.
மேலும் கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான ஆடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெகின்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வருவதையும் ஏற்க முடியவில்லை என்றும் ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்தது.
செல்போனுக்கு தடை
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குள் பக்தர்கள், அர்ச்சகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பும்படி அறநிலையத்துறை கமிஷனருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
அதன்படி கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை கமிஷனர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-
பெட்டகம்-டோக்கன் வசதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்குள்ள காவடி மண்டபத்தில் செல்போன் பாதுகாப்பகம் அமைக்கப்பட்டு, 300 செல்போன் வைக்கும் வகையில் பெட்டகம், டோக்கன் தரும் வசதி செய்யப்பட்டு வருகிறது.
தடையை மீறினால் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், திருப்பித்தர மாட்டாது எனவும் கோவில் வளாகத்தில் 15 இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்லாமல், இதுகுறித்து நாள்தோறும் ஒலிபெருக்கி மூலமாக பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கலெக்டர்-சூப்பிரண்டுக்கு கடிதம்
பக்தர்கள், கோவில் பணியாளர்கள், திரிசுதந்திரர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்பட அனைவரும் செல்போன் எடுத்து வர தடை விதிப்பது, பாரம்பரியத்தை காக்கும் வகையில் பக்தர்கள் ஆடைகள் அணிந்து வருவது போன்றவற்றை கண்காணிப்பதற்காக மகளிர் சுயஉதவி குழுவினரை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கும், இதற்காக உரிய பாதுகாப்பை அளிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவுக்கும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கட்டிடக்கலையின் சிறப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இது வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான கோவில். மற்ற கோவில்களைப் போல் இல்லாமல், இது 3 புனித துறவிகளால் கட்டப்பட்டது. இதன் கருவறை தரை மட்டத்திற்கு கீழே உள்ளது.
கோவிலின் மேற்கு வாசலில் அமைந்துள்ள 133 அடி உயர ராஜகோபுரம், கட்டிடக்கலையின் சிறப்பை காட்டுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வைகாசி விசாகம், ஆவணி திருவிழா, கந்தசஷ்டி, மாசித் திருவிழா போன்ற விசேஷ நாட்கள், பண்டிகை காலங்களில் பக்தர்கள் வருகை பலமடங்கு அதிகரிக்கும்.
கோவில்கள், வாழும் பாரம்பரியம்
கோவில்கள் பாரம்பரியமாகவே ஒவ்வொருவரின் வாழ்க்கையின் மையமாக இருந்து வருகின்றன. இவை ஒரு வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல், மக்களின் சமூக-கலாசார மற்றும் பொருளாதார வாழ்க்கையில் ஒருங்கிணைந்ததாக உள்ளன. தெய்வீகத்தையும், ஆன்மிகத்தையும் அனுபவிக்க லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்ப்பதற்காக, வாழ்ந்து கொண்டிருக்கும் தலங்கள்தான் கோவில்கள்.
அரசியலமைப்பு சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ், அனைவரும் சுதந்திரமாக மதத்தைப்பற்றி பேசுவதற்கும், பின்பற்றுவதற்கும், பிரசாரம் செய்வதற்கும் உரிமை உடையவர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஆனால், கோவிலுக்குள் இத்தகைய சுதந்திரத்தை கடைபிடிப்பது என்பது விதிமுறைகளுக்கு உட்பட்டது. கோவிலில் நடக்கும் வழிபாடுகளில் கடைபிடிக்க வேண்டிய சடங்குகள் குறித்த விதிகளை ஆகமங்கள் வகுத்துள்ளன. அதன்படி, கோவிலின் கண்ணியம், புனிதம் காக்கப்படுகிறது என்பதை கோவில் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து கோவிலிலும் தடை
அந்த வகையில் குருவாயூர், திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என நாட்டின் பல்வேறு கோவில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல திருச்செந்தூர் கோவிலிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை, ஆடை கட்டுப்பாடுகள் செய்வதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் செய்து தர வேண்டும்.
தூய்மை மற்றும் புனிதத்தை காக்கும் வகையில் செல்போன் தடை, ஆடை கட்டுப்பாடுகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.