கடலூரில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி செல்போன் பறிப்பு
கடலூரில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் பெரியகங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 54). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற கண்காணிப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்று பூ வாங்கிய பரமேஸ்வரன், மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து உழவர் சந்தை நோக்கி செல்ல முயன்றார்.
அப்போது அண்ணாபாலத்தில் இருந்து சிதம்பரம் மார்க்கமாக வந்த கார் ஒன்று, பரமேஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது. இதை பார்த்த பரமேஸ்வரன், காரில் வந்தவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. உடனே காரில் வந்த 3 பேர் காரை நிறுத்தி விட்டு, பரமேஸ்வரனை வழிமறித்தனர்.
வலைவீச்சு
பின்னர் அவரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவர்கள் 3 பேரும், பரமேஸ்வரனின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தாங்கள் வந்த காரில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பரமேஸ்வரன், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரமேஸ்வரனை தாக்கியவர்கள் யார்?, அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை நடுரோட்டில் வைத்து 3 பேர் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.