செல்போன் கடை உரிமையாளர்கள் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
பெரம்பலூரில் டேப்லெட்டை பழுதுநீக்கித் தரமறுத்ததற்காக ரூ.15 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க செல்போன்கடை உரிமையாளர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பழுது
பெரம்பலூரை அடுத்த ஆலத்தூர் தாலுகா பாடாலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் பவித்ரா. இவர் பாடாலூரில் தியேட்டர் பஸ்நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 4.8.2017 அன்று டேப்லெட் ஒன்றை வாங்கினார். அந்த டேப்லெட்டிற்கு ஒரு வருடம் வாரண்டி இருந்தது. இந்தநிலையில் அதில் சார்ஜ் நீண்டநேரம் நிற்காததால், இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
அப்போது பெரம்பலூர் பூசாரித்தெருவில் உள்ள செல்போன் கடைக்கு சென்று பில்லை காண்பித்து டேப்லெட்டில் உள்ள பழுதை சரிசெய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து பவித்ரா, பூசாரித்தெருவில் உள்ள மொபைல் விற்பனை ஷோரூமில் தனது டேப்லெட்டை கொடுத்து பழுதுநீக்கித்தருமாறு கேட்டதற்கு அந்த நிறுவனத்தினர் பவித்ராவை பலமுறை அலையவிட்டனர்.
உத்தரவு
இதனால் மனஉளைச்சல் அடைந்த பவித்ரா, இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் தனது வக்கீல் மூலம், பாடாலூர் தியேட்டர் பஸ்நிறுத்தத்தில் உள்ள மொபைல் கடையின் உரிமையாளர், பெரம்பலூர் பூசாரித்தெருவில் உள்ள மொபைல்கடை உரிமையாளர், பெங்களூருவில் இந்திராநகரில் உள்ள கன்ஸ்யூமர் கேர் எக்சிகியூட்டிவ், யுனைடெட் டெலி லிங்க்ஸ் உரிமையாளர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், பவித்ராவிற்கு டேப்லெட் விற்பனை செய்தவகையில் அதனை பழுதுநீக்கித்தருவதில் சேவை குறைபாடு, அவரை அலையவிட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தியமைக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரமும் எதிர்மனுதாரர்கள் தனி ஒருவராகவோ அல்லது கூட்டாகவோ 45 நாட்களுக்குள் பவித்ராவிற்கு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் தீர்ப்பு வழங்கிய தேதியில் இருந்து 8 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.