அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டாடினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கோவில்பட்டி
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
இதனை தொடர்ந்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கடம்பூர் ராஜூ கூறுகையில், எங்கள் பக்கம் தான் மெஜாரிட்டி உள்ளது. இப்போது எங்களுக்கு கிடைத்துள்ள தீர்ப்பும் நியாயத்தின் அடிப்படையில் கிடைத்த தீர்ப்பாகும். விரைவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளர் ஆவார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மூத்த நிர்வாகிகள் கலந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினாலும், இதே தீர்ப்பு தான் வரும் என்றார்.
தென்திருப்பேரை
தென்திருப்பேரையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் தென்திருப்பேரை நகரச் செயலாளர் ஆறுமுக நயினார், ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்
நகர அ.தி.மு.க செயலாளர் ராஜகுமார் தலைமையில் எட்டயபுரம் நகரில் உள்ள 15 வார்டுகளில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருச்செந்தூர்
எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளதை அடுத்து, திருச்செந்தூரில்
அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், காயல்பட்டினம் பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.