அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு


அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி  திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனா்.

கடலூர்


கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜிசாலையில் பகவதி என்கிற கழுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் அபிஷேகம், சந்தன அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

நேற்று காலை 8 மணிக்கு பெண்ணை ஆற்றில் இருந்து கரகம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8 மணிக்கு மின் அலங்காரத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாகை வார்த்தல்

கடலூர் வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் 71-வது ஆண்டு செடல் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று சிகர நிகழ்ச்சியான செடல் திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு கெடிலம் ஆற்றில் இருந்து நீர் திரட்டி வருதல், காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கூழ் ஏற்றி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து செடல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தியதை பார்க்க முடிந்தது. அதன்பிறகு காத்தவராயனுக்கு கும்பம் கொட்டுதல், அம்மன் வீதி உலா நடந்தது.

தெருக்கூத்து

இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனை, மதியம் 2 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், இரவு 7 மணிக்கு தெருக்கூத்து நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வண்ணாரப்பாளையம் விழாக்குழுவினர், பொதுமக்கள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.


Next Story