கார்த்தி சிதம்பரம் மகளின் 'லேப்டாப்' பை எடுத்து சென்ற சி.பி.ஐ அதிகாரிகள்
கார்த்தி சிதம்பரம் வீட்டில் இன்று நடைபெற்ற சோதனையில் அவரது மகளின் லேப்டாப்பை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர்.
சென்னை,
கார்த்தி சிதம்பரம் வீட்டில் இன்று நடைபெற்ற சோதனையில் அவரது மகளின் லேப்டாப்பை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் எஸ்.சரத்பாபு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது;-
சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் கடந்த மே 17-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் எதுவுமே பறிமுதல் செய்யப்படவில்லை. வீட்டின் அறையில் இருந்த ஒரு 'கப்-போர்ட்' மட்டும் திறக்கப்படவில்லை. அதற்கான சாவி உரிமையாளரிடம்(கார்த்தி சிதம்பரம்) இருந்தது. அவரும் அப்போது வெளிநாட்டில் இருந்தார். இந்த கப்-போர்ட் இன்று நடந்த சோதனையின்போது திறந்து பார்க்கப்பட்டபோது, அதில் துணிகள் மட்டுமே இருந்தன. சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்த எதையுமே பறிமுதல் செய்யவில்லை.
இந்தநிலையில் கார்த்தி சிதம்பரத்தின் மகளின் 'லேப்டாப்' மற்றும் 'ஐ-பாட்' ஆகியவற்றை சட்டவிரோதமாக சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் படிக்கும் அந்த மாணவியின் இக்கல்வியாண்டுக்கான கல்வி சார்ந்த குறிப்புகளே அதில் இருக்கின்றன. சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், சட்டவிரோதமான இந்த பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான செயல்பாடுகளுக்காக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.