காவிரி-தென்பெண்ணை ஆறுகளை இணைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
காவிரி-தென்பெண்ணை ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
பிரசார நடைபயணம்
தர்மபுரி-காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3-வது நாள் பிரசார நடைபயணம் தொடக்க விழா கம்பைநல்லூரில் நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி துணைத்தலைவரும், பா.ம.க. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான எஸ்.மதியழகன் தலைமை தாங்கினார்.
கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தமிழ்நாடு உழவர் பேரிக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி, வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் இமயவர்மன், ஒன்றிய செயலாளர்கள் பசவராஜ், சேட்டு, நகர செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொரப்பூர் ஒன்றியக்குழு துணை தலைவர் சி.வன்னிய பெருமாள் வரவேற்று பேசினார்.
இணைக்க வேண்டும்
தொடர்ந்து நடைபயணத்தை தொடங்கிய பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் வடக்கு பகுதியில் தென்பெண்ணை ஆறும், மேற்கு பகுதியில் காவிரி ஆறும் ஓடுகிறது ஆனாலும் மாவட்ட மக்கள் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் காவிரி-தென்பெண்ணை ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி உபரிநீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் பொதுமக்கள் ஒருங்கிணைந்து போராடுவார்கள்.
எனவே தமிழக அரசு உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மொரப்பூர் மற்றும் கம்பைநல்லூர் பகுதி மக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் கே.ஈச்சம்பாடி ஊராட்சியில் சிட்கோ தொழிற்சாலை செயல்பட தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று கூறினார்.
மொரப்பூர்-அரூர்
விழாவில் மாநில துணைத்தலைவர் பாடிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் மொரப்பூரில் நடைபயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சின்னசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தணிகாசலம் வரவேற்று பேசினார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கோபாலபுரம், மெணசி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக நடைபயணம் மேற்கொண்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொம்மிடியில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார்.