காவிரி விவகாரம்; தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - கர்நாடக அரசு பதில் மனு


காவிரி விவகாரம்; தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - கர்நாடக அரசு பதில் மனு
x
தினத்தந்தி 6 Sept 2023 1:08 PM IST (Updated: 6 Sept 2023 2:26 PM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

பெங்களூரு,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. தமிழகம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

மேலும் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரிய வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி நரசிம்மா தற்போது விடுப்பில் உள்ளார்; அடுத்த வாரம் நீதிபதி கவாய் விடுப்பில் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு வரும் 21ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செயப்பட்டுள்ளது. அந்த மனுவில், உரிய கணக்கிடுகள் இல்லாமல் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதியின் வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறை அளவீடுகளை ஒட்டுமொத்த நீர்பிடிப்பு பகுதிகளிலும் கணக்கிட வேண்டும். கர்நாடகத்தின் 4 அணைகளில் உள்ள நீரின் அளவை மட்டும் வைத்து கணக்கிட கூடாது.

எனவே, உரிய கணக்கிடுகள் இல்லாமல் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடகா அரசு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story