காவிரி, கொள்ளிடத்தில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு


காவிரி, கொள்ளிடத்தில் 3-வது நாளாக  வெள்ளப்பெருக்கு
x

காவிரி மற்றும் கொள்ளிடத்தில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளனர்.

திருச்சி

காவிரி மற்றும் கொள்ளிடத்தில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால், நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று சற்று குறைந்து மதியம் நிலவரப்படி 1 லட்சத்து 89 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு சற்று குறைந்து வினாடிக்கு 1 லட்சத்து 89 ஆயிரம் கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 59 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீரானது இரு கரைகளையும் தொட்டவாறு செல்கிறது.

81 குழந்தைகள்

இந்த நிலையில் நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் கும்பகோணத்தான் சாலை ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் அந்த பகுதியில உள்ள அரசு பள்ளியிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வரவில்லை, இதையடுத்து அந்த பகுதியில் 2 திருமண மண்டபம் மற்றும் ஒரு அரசு பள்ளியிலும், லால்குடி பகுதியில் ஒரு திருமண மண்டபம், மண்ணச்சநல்லூர் பகுதியில் 2 திருமண மண்டபத்தில் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு முகாம்களில் 81 குழந்தைகள் உள்பட 311 பேர் வரை உள்ளனர்.

திருச்சியை அடுத்த கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி, கிளிகோடு, திருவளர்ச்சோலை ஆகிய பகுதிகளில் வயல்களுக்குள் புகுந்த வெள்ளம் 3-வது நாளாக இன்னும் வடியவில்லை. உத்தமர்சீலியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை 3-வது நாளாக தண்ணீர் மூழ்கடித்தப்படி செல்கிறது. கம்பரசம்பேட்டை உள்ள கீதாபுரம் படித்துறையையும் வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. அம்மா மண்டபம் படித்துறையும் மூடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் பொதுமக்கள் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேரிடர் மீட்பு படையினர் தயார்

இதேபோல் ஜீயபுரம் அருகே முக்கொம்பு அருகே உ ள்ள திருப்பராய்த்துறைத்தில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின. மேலும் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் மின் மோட்டார் அறை பகுதியையும் தண்ணீர் சூழ்ந்துள்ளன, இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளதால் சென்னையில் இருந்து வந்து பேரிடர் மீட்பு குழுவினர் ஜீயபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.இந்த மீட்பு குழுவில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 30 ேபர்கள் ரப்பர் படகு உள்ளிட்ட அனைத்து வெள்ள மீட்பு பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

லால்குடி

லால்குடி அருகே கே.வி.பேட்டையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கோட்டாட்சியர் வைத்தியநாதன் உணவுப்பொருள்களை வழங்கினார். இதில் லால்குடி தாசில்தார் சிஸிலினா சுகந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story