குழாய் உடைப்பால் கடலில் வீணாகும் காவிரி குடிநீர்


குழாய் உடைப்பால் கடலில் வீணாகும் காவிரி குடிநீர்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரோடு பாலத்தில் காவிரி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடலில் கலந்து குடிநீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் ரோடு பாலத்தில் காவிரி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடலில் கலந்து குடிநீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வறண்ட மாவட்டம்

தமிழகத்திலேயே மிக வறண்ட மாவட்டம் என்றால் அது ராமநாதபுரம் மாவட்டம் தான். அதற்கு முக்கிய காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. ஒருபுறம் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி கடலில் வீணாக கலக்கிறது. மறுபுறம் போதிய மழையின்மையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்காக மக்கள் அல்லல்படும் வேதனை சொல்லி மாளாது.

இன்னும் சொல்ல போனால் பெண் வீட்டார் புதிதாக திருமணம் ஆகி செல்லும் மணப்பெண்ணுக்கு குடங்களுடன் சென்று தண்ணீர் எடுப்பதற்காக தள்ளுவண்டிகளை சீர்வரிசை கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சிக்கல், இதம்பாடல், தேரிருவேலி, கடுகுசந்தை, திருப்பாலைக்குடி, திருப்புல்லாணி, காவனூர், குளத்தூர், தொண்டி உள்ளிட்ட பல ஊர்களில் மக்கள் குடிதண்ணீருக்காக அலைந்து கஷ்டப்பட்டு வரும் நிலை இன்றும் இருந்து தான் வருகிறது. பலர் தள்ளுவண்டிகளிலும், இருசக்கர வாகனங்களிலும் தண்ணீரை தேடி குடங்களுடன் அலைந்து திரிவதை பார்க்கலாம்.

அதே நேரத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையானது பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இதை தவிர மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்புகள் கொடுக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

வீணாகும் குடிநீர்

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளுக்கு பாம்பன் ரோடு பாலத்தின் நடைபாதையில் பெரிய குழாய் பதிக்கப்பட்டு அதன் மூலம் காவிரி குடிநீரானது கொண்டுவரப்படுகின்றது.

இந்த நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் நேற்று காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குடிநீரானது பாலத்தின் தடுப்புச்சுவர் இடைவெளி வழியாக அதிக அளவில் கடலில் வீணாகிக் கொண்டிருந்தது. இதை தவிர சாலையிலும் குடிநீர் ஆறு போல ஓடிக்கொண்டிருந்தது.

மாவட்டத்தில் பல ஊர்களில் மக்கள் குடிதண்ணீருக்காக அலைந்து கஷ்டப்பட்டு வரும் நிலை ஒரு புறம் இருக்க பாம்பன் ரோடு பாலத்தில் இதுபோன்று அடிக்கடி காவிரி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பல ஆயிரம் லிட்டர் கடலில் கலந்து வீணாகி வருவது வேதனை அளிக்கிறது.

சீரமைக்க கோரிக்கை

பாம்பன் ரோடு பாலத்தின் நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகுவது வாடிக்கையாகின்றது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரோடு பாலத்தின் நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு புதிதாக அதிக தரம் வாய்ந்த குழாய்களை அமைத்து குடிதண்ணீர் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story