காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள்: சென்னை-திருச்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்


காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள்: சென்னை-திருச்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
x

திருச்சி காவிரி பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு பராமரிப்பு பணி தொடங்கியது. இதனால் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரி பாலத்தில் 5 மாதங்கள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காவிரி பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் திருச்சியில் இருந்து சென்னை வரும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தை தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவிநகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1 டோல்கேட்டை அடைந்து சென்னை வரலாம்.

அவ்வாறே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சியை சென்றடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

காவிரி பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பாலத்தின் முன்பு இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சி ஓயாமரி சாலை மற்றும் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பராமரிப்பு பணி தொடங்கியது

பைபாஸ் சாலையில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து வரிசையில் நின்று மெதுவாக சென்று வருகின்றன.

இதற்கிடையே காவிரி பாலத்தில் நேற்று முதலே பராமரிப்பு பணிகளும் தொடங்கியது. ஊழியர்கள் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் எந்திரம் மூலம் பணியில் ஈடுபட்டனர். பாலத்தில் வாகனங்கள் செல்லாததால் பொதுமக்கள் அதிக அளவில் கூடி நின்று காவிரி ஆற்றின் அழகை ரசித்து வருகிறார்கள்.


Next Story