தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 624 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.


தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 624 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நடவடிக்கையால் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 624 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 624 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

விழிப்புணர்வு

தென்மாவட்டங்களில் சாதி மோதல்கள் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தன. இந்த சாதி மோதல்களை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் சாதி ரீதியான பாகுபாடுகளை களைவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி உள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் பொதுமக்களை உறுதி மொழி ஏற்க செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 671 விழிப்புணர்வு கூட்டங்களை மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்தி உள்ளனர். இதன் மூலம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 854 பொதுமக்களை நேரடியாக சந்தித்து உறுதி மொழி ஏற்க செய்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்காக 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

6,624 இடங்கள்

அதே போன்று மாவட்டம் முழுவதும் சாதிய அடையாளங்களை பொதுமக்களே முன்வந்து அழிப்பதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் போலீசார் பொதுமக்களை சந்தித்து பேசுகின்றனர். சாதிய மோதல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து பொதுமக்களே முன்வந்து தங்கள் ஊரில் சுவர்கள், மின்கம்பங்கள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வரையப்பட்டு இருக்கும் சாதிய அடையாளங்களை அழித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இந்த பணி தினம் தோறும் நடந்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 624 இடங்களில் வரையப்பட்டு இருந்த சாதிய அடையாளங்கள் வெள்ளை நிற பெயிண்டால் அழிக்கப்பட்டு உள்ளன.

பல சாதி மோதல்கள், சாதி அடையாளங்களை அவமதிப்பதால்தான் உருவாகி வருகிறது. இது போன்று சாதிய அடையாளங்கள் அழிக்கப்படுவதால், பெரும்பாலும் சாதிய மோதல்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


Next Story