பள்ளி, கல்லூரிகளில் சாதி பாகுபாடு; விசாரணையை துவங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு
ஒரு நபர் விசாரணைக்குழுவிற்கு பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து கடிதங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் இணைந்து வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் நிலவும் சாதி பாகுபாடு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த குழுவிற்கு முதற்கட்டமாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினருக்கும் கேள்வி வடிவிலான தொகுப்புகளை அனுப்பி, கல்வி நிலையங்களில் சாதி, மத மோதல்களுக்கு காரணம் என்ன என்பதை அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, தற்போது தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார்.