நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதையடுத்து நேரில் வந்து ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில், அது நயினார் நாகேந்திரனின் பணம்தான் என முதற்கட்ட தகவல் வெளியாகியது.
இதுதொடர்பாக நெல்லை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, நாளை விசாரிப்பதாக தெரிவித்தது.