பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:45 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.

விழுப்புரம்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் செயல்பட்டார். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தமிழக அரசின் அப்போதைய உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில், இதுபற்றி புகார் கொடுக்கச்சென்ற தன்னை செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தடுத்து நிறுத்தி தன்னுடைய கார் சாவியை பறித்து மிரட்டியதாகவும் கூறியிருந்தார். இந்த புகார்களின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் இந்த புகார் தொடர்பாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழும், அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழும் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு, தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

சாட்சிகளின் விசாரணை நிறைவு

குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், உடனடியாக விசாரணையை தொடங்கியது.

இவ்வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு எதிராக 127 சாட்சிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்ததோடு, 72 முக்கிய ஆவணங்களையும் சேகரித்த நிலையில், வழக்கின் விசாரணை கடந்த 9.8.2021 அன்று தொடங்கப்பட்டது.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் 5 பேர் உள்பட மொத்தம் 127 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, அவர்களின் விசாரணை அதே ஆண்டில் நவம்பர் மாதம் தொடங்கியது. மேலும், 127 பேர் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டபோதிலும் வழக்கிற்கு மிகவும் முக்கிய சாட்சிகளாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் 5 பேர் உள்பட 68 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டனர். அவர்கள் 68 பேரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.

இருதரப்பு வாதங்கள் தாக்கல்

இந்த வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வக்கீல்களும் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 12-ந் தேதியன்று நடந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல்கள் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர்.

அதேபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் தரப்பு வக்கீல்களும் தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இவ்வழக்கில் அனைத்து விசாரணையும் நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கில் ஜூன் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.

சதித்திட்டம் தீட்டி வழக்கு

அதன்படி, தீர்ப்பு அளிப்பதற்காக காலை 10.30 மணிக்கு மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, கோர்ட்டுக்கு வந்தார். அவர் முன்னிலையில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகிய இருவரும் ஆஜராகினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, முதலாவதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசிடம், உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் உங்களை குற்றவாளி என்று முடிவு செய்துள்ளோம்.

இதற்கு நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு, எனக்கு எதிரிகள் அதிகம் உள்ளனர், நண்பர்கள் யாரும் கிடையாது, என் மீது வீண்பழி சுமத்துவதற்காக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, என்னுடைய பதவி உயர்வை தடுத்து நிறுத்துவதற்காக சதித்திட்டம் தீட்டி வழக்கு போட்டுள்ளனர், என் மீது எந்த குற்றமும் இல்லை என்றார்.

அதேபோல் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனிடம், உங்களையும் இவ்வழக்கில் குற்றவாளி என்று முடிவு செய்துள்ளதாக நீதிபதி புஷ்பராணி கூறியதோடு, இதற்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர், நான் நிரபராதி, என் மீது எந்த குற்றமும் இல்லை என்றார்.

3 ஆண்டு சிறை

இதை ஏற்க மறுத்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கில் பரபரப்பான தீர்ப்பை வாசித்தார். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக இவ்வழக்கின் முதலாவது குற்றவாளியான ராஜேஷ்தாசுக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354 ஏ (2) பிரிவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடை சட்டம் பிரிவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், 341, 109 பிரிவுக்கு ரூ.500 அபராதமும், 506, 109 பிரிவுக்கு விடுதலை செய்தும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. ஏக காலம் என்பதால் ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் இவ்வழக்கின் 2-வது குற்றவாளியான செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 341 பிரிவுக்கு ரூ.500 அபராதம் விதித்தும், 506 (1) பிரிவுக்கு விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஜாமீன்

இதையடுத்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ், தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை கோர்ட்டில் செலுத்தினார். மேலும் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, அடுத்த மாதம் ஜூலை 17-ந்தேதிக்குள் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், அதன் ஆவணங்களை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதேபோல் முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையையும் கோர்ட்டில் செலுத்தினார்.

தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜேஷ்தாஸ், பணியில் இருந்து ஓய்வுபெற இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தற்போது வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளார்.

போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தற்போது போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் உதவி ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன், கலா மற்றும் கடலூர் மண்டல குற்ற வழக்கு தொடர்வுத்துறை துணை இயக்குனர் அம்ஜத்அலி, உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோரும், ராஜேஷ்தாஸ் தரப்பில் வக்கீல்கள் ரவீந்திரன், தினகரன் உள்ளிட்டோரும், கண்ணன் தரப்பில் வக்கீல்கள் வெங்கடேசன், ஹேமராஜன் ஆகியோரும் ஆஜராகினர்.

பலத்த பாதுகாப்பு

முன்னதாக நீதிமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 வருடமாக நடந்து வந்த இவ்வழக்கில் தற்போது வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story