பெண் பக்தரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்த வழக்கு: கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்


பெண் பக்தரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்த வழக்கு: கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்
x
தினத்தந்தி 23 May 2024 4:15 AM (Updated: 23 May 2024 4:15 AM)
t-max-icont-min-icon

தலைமறைவாக உள்ள கார்த்திக் முனுசாமி தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

சென்னை,

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர், சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர் மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரில், மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சாமி கும்பிட அடிக்கடி சென்ற எனக்கு, கோவிலில் பூசாரியாக பணியாற்றி வரும் கார்த்திக் முனுசாமி என்பவர் பழக்கமானார். நாங்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், சொகுசு காரில் அவரது வீட்டுக்கு அழைத்து சென்ற கார்த்திக் முனுசாமி, தீர்த்தம் எனக்கூறி திரவம் ஒன்றை கலந்து கொடுத்து குடிக்க கொடுத்தார்.

அதை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கிய நிலையில், என்னை கற்பழித்து விட்டார். பின்னர் ஆசைவார்த்தை கூறி அம்மன் கோவிலில் தாலி கட்டி என்னை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனது கருவை கலைத்து விட்டதாகவும், அதன் பிறகு தன்னை பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக விருகம்பாக்கம் மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கார்த்திக் முனுசாமி தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


Next Story