பெண்ணை காரில் அழைத்து சென்று தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு


பெண்ணை காரில் அழைத்து சென்று தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
x

பணகுடியில் பெண்ணை காரில் அழைத்து சென்று தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி கோரி காலனியைச் சேர்ந்தவர் சித்திரை செல்வன் (வயது 36). இவர் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பணகுடி பகுதியைச் சேர்ந்த 44 வயதான பெண் ஒருவர் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் காரில் அழைத்து சென்று தாக்கியதாக கூறி, பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். பின்னர் அந்த பெண் வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்ததும், கணவரை பிரிந்து வாழ்ந்த அந்த பெண்ணிடம் இருந்து அவ்வப்போது சித்திரை செல்வன் பணம் வாங்கியதும் தெரியவந்தது.

பின்னர் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், அந்த பெண் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார். எனவே அவர், சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனிடம் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சித்திரை செல்வன் நேற்று முன்தினம் அந்த பெண்ணிடம் செல்போனில் நைசாக பேசி தனியாக காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து அந்த பெண்ணை அவர் அவதூறாக பேசி தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை பணகுடியில் இறக்கி விட்டு சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது இந்திய தண்டனை சட்டம் 294-பி (பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல்), 323 (காயப்படுத்துதல்), பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை காரில் அழைத்து சென்று சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story