வங்கி ஊழியரை தாக்கிய கணவர் மீது வழக்கு
வங்கி ஊழியரை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கீழ வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நித்தியா(வயது 36). தனியார் வங்கி ஊழியர். இவரது கணவர் இளையராஜா. இவர்களுக்கு இடையே ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இளையராஜா மற்றும் அவரது சகோதரர் பாலமுருகன் ஆகியோர் நித்தியா பணிபுரியும் வங்கிக்கு சென்று தங்களது தாய் பெயரில் வங்கிக்கடன் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, இளையராஜா ஹெல்மெட்டால் நித்தியாவை தாக்கியதாக ெதரிகிறது. இது தொடர்பாக நித்தியா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்படி, இளையராஜா உள்பட 3 பேர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட்; ஒருவர் கைது
* திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த 11-ந் தேதி சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சை ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த நேரு(52) என்ற பயணி போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் செல்ல இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.
கோவில் திருவிழாவில் தகராறு
* துறையூர் அருகே உள்ள முருகூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(31). இவரது சகோதரர் பாலாஜி (29). இவர்கள் இருவரும் மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தில் நடைபெற்ற முத்து கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவில் அவர்கள் மேளம் வாசித்தபோது அவர்களுக்கும், அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சபரி (19), விக்னேஷ் என்ற விக்கி (19), அபிஷேக் (19), சூர்யா (20) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பானது. இதில் சரவணன், பாலாஜியை இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து, 4 பேரையும் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 9 பேர் கைது
* திருச்சியில் நேற்று பல்வேறு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்றதாக ராம்ஜி நகரில் சந்தோஷ்குமார் (37), உதயன் (63), ஏர்போர்ட் பகுதியில் யுகேந்திரன் (32), ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் சந்தோஷ்குமார் (19), கோட்டை பகுதியில் சிவகுரு (22), சூளக்கரை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (61), பீமநகரில் கார்த்திக் (24), பொன்மலை ஜி கார்னரில் பாண்டியன் (26), காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் சிவலிங்கம் (28) ஆகிய 9 பேர் கைது செய்து, மொத்தம் 820 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.