சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
x

சென்னை,

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்ந்ததாக அவர் மீதும், அவரது மனைவி, நண்பர் ஆகியோர் மீதும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் கோர்ட்டு நீதிபதி, வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

வேலூர் கோர்ட்டு பிறப்பித்த இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story