சனாதன விவகாரம்: பாஜக ஐ.டி. விங் தலைவர் மீது வழக்குப்பதிவு
சனாதன விவகாரம் தொடர்பாக பாஜக ஐ.டி. விங் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கொரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது, ஒழிக்க வேண்டும், அதுபோல சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பு பொருத்தமானது என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பின.
இதனைத்தொடர்ந்து உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மாள்வியா தனது எக்ஸ் வலை தளத்தில், "சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியா கொரோனாவை போன்று சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுக்கிறார்" என்று அதில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக அமித் மாள்வியா மீது திருச்சி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.