பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விராலிமலை தாலுகா, பிச்சுதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி என்கிற கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவரது மனைவி மாரிக்கண்ணு (35). அதே ஊரை சேர்ந்தவர் நதியா (36). இந்நிலையில் நேற்று முன்தினம் மாரிக்கண்ணு வயல் அருகே நதியா ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது மாடு மாரிக்கண்ணுவின் வயலில் சென்று மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த ரவி இருவரையும் விலக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அன்று மாலை இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த நதியாவின் தந்தை போஸ், அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி, பிச்சுதேவன்பட்டியை சேர்ந்த முருகேசன் ஆகிய 3 பேரும் மாரிக்கண்ணு வீட்டிற்கு சென்று ஏன் நதியாவை அடித்தாய் என்று கேட்டு மாரிக்கண்ணுவை கட்டையால் அடித்து காயப்படுத்தியதுடன் மானபங்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாரிக்கண்ணுவை அருகில் உள்ள அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிக்கண்ணுவை தாக்கி காயப்படுத்தி மானபங்கப்படுத்திய போஸ், சுப்பிரமணி, முருகேசன், நதியா ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல நதியாவும் தன்னை ரவி மற்றும் அவரது மனைவி மாரிக்கண்ணு ஆகிய இருவரும் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.