தாய், மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


தாய், மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x

தாய், மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

முசிறி:

தாய்-மகன் மீது தாக்குதல்

முசிறி அருகே உள்ள தும்பலத்தை அடுத்த பெருமாள்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுசாமியின் மகன் ராஜசேகரன்(வயது 30). இவரது மனைவி கலையரசி. தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சார்பு நீதிமன்றத்தில் விவாகரத்து குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பெருமாள்பாளையத்தை சேர்ந்த கலையரசி, செல்லமுத்துவின் மகன் சங்கர், அவரது மகன் மோகன், சங்கரின் மனைவி பரமேஸ்வரி ஆகியோர் ராஜசேகரன் வீட்டிற்கு சென்று தரக்குறைவாக திட்டி ராஜசேகரன், அவரது தாய் ஜோதிமணி(54) ஆகியோரை கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து 2 பேரும் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து 4 பேர் மீதும் முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட முயன்றவர் கைது

*திருச்சி தீரன்நகர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் சபிதா ராணி(62). சுங்கவரித்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு ஒரு அறையில் படுத்து ஓய்வு எடுத்தார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அலமாரியில் உள்ள பொருட்களை திருட முயன்றார். சத்தம் கேட்டு வெளியே வந்த சபீதா ராணி, அக்கம் உதவியுடன் அந்த நபரை பிடித்து சோமரசம்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து செல்வி ஆதித்யா நடத்திய விசாரணையில் அந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம், வெட்டிக்காடு, மகாராஜா சமுத்திரம், கணபதி தெருவை சேர்ந்த வீரமணி(25) என்பதும், தற்போதுதான் ஜெயிலிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

*முசிறி அருகே உள்ள வீரமணிப்பட்டிைய சேர்ந்தவர் முருகேசன்(40). இவருக்கும் பேரூர் அர்ஜுனன் தெருவை சேர்ந்த கனகராஜின் மகன் நந்தகுமாருக்கும்(26) பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தண்டலைபுத்தூரில் உள்ள ஒரு உணவு விடுதியில் நின்ற முருகேசனிடம், நந்தகுமார், அவரது நண்பர்கள் ஆனந்த் (35) சுந்தரவேல் (26) ஆகியோர் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது நந்தகுமார் பீர் பாட்டிலால் குத்தியதில் முருகேசன் காயமடைந்து, முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரவேலை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சலசலப்பு-வாக்குவாதம்

*துறையூரை அடுத்த மருவத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலை நிர்வகிப்பது மற்றும் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினரிடைய பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நேற்று அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம், துறையூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் வனஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கோவில் சாவியை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஒரு தரப்பினர் மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் நிர்வாகம் மற்றும் உரிமை தொடர்பாக கோர்ட்டை அணுகி தீர்த்துக் கொள்ளவும், அதுவரை கோவில் பூட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து இருதரப்பினரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் துறையூர் போலீசில் முறையிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது

*திருச்சி கோட்டை கீழஆண்டாள் புதுத்தெருவில் சுப்பிரமணி (44) என்பவர் வீட்டில் தீபாவளி பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்திருப்பதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சுப்பிரமணியின் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது, அனுமதியின்றி 48 பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.


Next Story