சித்திரை திருவிழா நாட்களில் மதுக்கடைகளை மூடக்கோரி வழக்கு
சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் மதுக்கடைகளை மூடக்கோரிய வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.
சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் மதுக்கடைகளை மூடக்கோரிய வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.
சித்திரை திருவிழா
மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் என சித்திரை திருவிழா பல நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. இந்த விழாக்களில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த சித்திரை திருவிழாவானது சைவ, வைணவ மார்க்கங்களை இணைக்கும் முக்கிய விழாவாகவும் கருதப்படுகிறது. ஆனால் தற்போது சித்திரை திருவிழாைவெயாட்டி ஏராளமான குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. மது போதையில் இருப்பவர்கள்தான் பல்வேறு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்து உள்ளது.
மதுக்கடைகளை மூடுங்கள்
இந்தநிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் ஆகிய விழாக்களையொட்டி, வருகிற 30-ந்தேதி (அதாவது நாளை) முதல் மே மாதம் 6-ந்தேதி வரை மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான விற்பனை நிலையங்களை மூட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனது மனுவின் அடிப்படையில் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் நிரஞ்சன் எஸ் குமார் ஆஜராகி, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த விழாக்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றார்.
கலெக்டர் பரிசீலிக்க உத்தரவு
பின்னர் அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, இதுவரை சித்திரை திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. விழாவை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தடுக்கும் வகையிலும் முன்னேற்பாடு நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரரின் மனுவை மதுரை மாவட்ட கலெக்டர் பரிசீலித்து, தேவைப்படும்பட்சத்தில் டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.