காரிமங்கலத்தில்போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடிஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்கு
காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி செய்தது தொடர்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 4 பேர் மீது தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலி ஆவணம்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பொம்மஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன். இவர் கடந்த 1992-ம் ஆண்டு இறந்து விட்டார். இவருக்கு சொந்தமான 2.50 சென்ட் நிலம் அவருடைய வாரிசுதாரர்களான அந்தோணி, காணிக்கை சாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அந்த நிலத்தை கேத்தனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான செல்வராஜ் (வயது 70) குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் செல்வராஜ், சின்னப்பன் என்ற பெயரில் தனக்கு போலியாக ஒரு வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுள்ளார். அந்த ஆவணத்தை வைத்து குத்தகைக்கு பயன்படுத்தி வந்த நிலத்தை தனது மனைவி பொருத்தல் மேரி (68) என்பவரின் பெயரில் காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்துள்ளார்.
4 பேர் மீது வழக்குப்பதிவு
பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் போலியான வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி செல்வராஜ் நிலத்தை தனது மனைவியின் பெயரில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக காரிமங்கலம் சார்பதிவாளர் ஜெயகீதா தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக செல்வராஜ், அவருடைய மனைவி பொருத்தல் மேரி, உடந்தையாக செயல்பட்ட காரிமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (50), மாதேஷ் (41) ஆகிய 4 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.