மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தச்சுத் தொழிலாளி சாவு
ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தச்சுத்தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ராசிபுரம்
தச்சுத்தொழிலாளி
நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம் வேப்பநந்தம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 59). தச்சுத் தொழிலாளி. அவரது மனைவி காமாட்சி (43). இவர்களுக்கு குணா (23), தயாளன் (20) என்ற 2 மகன்களும், ரம்யா (21), காவியா (17) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் மல்லூர் அருகே உள்ள பி.மேட்டூரில் நடந்த அவரது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அவர் ராசிபுரம் அருகே உள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்ட கடளூர் கேட் எம்.ஆர்.எப். டயர் கடை அருகில் சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
டிரைவர் கைது
இதில் பலத்த காயம் அடைந்த பொன்னுசாமியை அங்கிருந்தவர்கள் உடனடியாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பொன்னுசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி பொன்னுசாமியின் மனைவி காமாட்சி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் ஏ.கே.சமுத்திரத்தைச் சேர்ந்த குமார் (56) என்பவரை கைது செய்தனர்.