பள்ளத்தில் கார் கவிழ்ந்து முதியவர் பலி


பள்ளத்தில் கார் கவிழ்ந்து முதியவர் பலி
x
தினத்தந்தி 8 Oct 2023 4:00 AM IST (Updated: 8 Oct 2023 4:01 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி-குன்னூர் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து முதியவர் பலியானார். குடிபோதையில் டிரைவர் ஓட்டியதால் விபத்து நடந்துள்ளது.

நீலகிரி

ஊட்டி-குன்னூர் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து முதியவர் பலியானார். குடிபோதையில் டிரைவர் ஓட்டியதால் விபத்து நடந்துள்ளது.

கார் விபத்து

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 62). தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று சந்திரன் ஊட்டி அருகே எல்லநள்ளி பகுதியில் இருந்து பழைய அருவங்காடு பகுதிக்கு ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணி (47) என்பவர் தனது காரில் எல்லநள்ளி பகுதியில் இருந்து பழைய அருவங்காடு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனால் சந்திரன் லிப்ட் கேட்டு அந்த காரில் ஏறிக்கொண்டார். அங்கிருந்து சிறிது தூரம் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து வளைவான பகுதியில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மரத்தில் மோதி நின்றது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த மணியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகமணி, சப்-இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காரை ஓட்டிய மணி சம்பவம் நடந்தபோது குடிபோதையில் இருந்தது தெரிய வந்து உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story