சாலையில் கார் கவிழ்ந்து விபத்து: காயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்த அமைச்சர்


சாலையில் கார் கவிழ்ந்து விபத்து: காயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்த அமைச்சர்
x

சாலையில் கார் கவிழ்ந்து விபத்து: காயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்த அமைச்சர்.

திருப்பூர்,

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 27), பிரகாஷ் (32), மணிகண்டன் (29), குமார் (32), மோகனசுந்தரம் (17). இவர்கள் 5 பேரும் கொடைக்கானல் சுற்றுலா சென்று விட்டு நேற்று காரில் சேலம் நோக்கி வந்தனர். இவர்களது கார் மாலை 4 மணி அளவில் தாராபுரம்-காங்கயம் சாலையில் ஊதியூரை அடுத்த நொச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த 5 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.

அப்போது அந்த வழியாக தாராபுரத்திற்கு நல்லதங்காள் ஓடை திறந்து விடும் நிகழ்ச்சிக்காக சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அமைச்சர் மற்றும் கலெக்டர் உடனடியாக தங்களது காரை நிறுத்தி கீழே இறங்கி சென்று காயங்களுடன் இருந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிரகாஷ் மற்றும் கவுதம் ஆகிய 2 பேரும் ஈரோடு தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 3 பேருக்கும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story