கார் கடன் வழங்கியதாக ஆவணங்களை தயாரித்து முறைகேடு: விவசாயி குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


கார் கடன் வழங்கியதாக ஆவணங்களை தயாரித்து முறைகேடு: விவசாயி குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
x

கார் கடன் வழங்கியதாக ஆவணங்களை தயாரித்து கடன் தொகையை முறைகேடாக பயன்படுத்திய தனியார் நிறுவனம் விவசாயி குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பலூர்

கார் வாங்க கடன்

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலை அருகே உள்ள சின்னாறு சவுந்திரியா நகரை சேர்ந்தவர் ரத்தினவேலு, விவசாயி. இவருக்கும், சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் டி.வி.எஸ். கிரெடிட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முகவர் சாமிநாதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை வைத்து சாமிநாதன், ரத்தினவேலுவிடம் அவரது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை தருமாறும், கார் வாங்க உடனே கடன் பெற்றுத்தருவதாகவும் சாமிநாதன் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ரத்தினவேலு, சாமிநாதனிடம் தனது ஆவணங்களின் நகல்களை கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரத்தினவேலு பெயரில் டி.வி.எஸ். கிரெடிட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தினர், கார் வாங்குவதற்கான கடன் கணக்குகளை உருவாக்கி, ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 250-க்கு கடன் வழங்கியதாக கணக்கு வைத்து, மாதந்தோறும் ரூ.13 ஆயிரத்து 603 என 48 மாதங்களில் தவணைகளில் (இ.எம்.ஐ.) செலுத்துவதாக ஆவணங்களை தயார் செய்து ஒரு காரை வாங்கி அதனை ஈடாக வைத்துள்ளனர். ஆனால் ரத்தினவேலு, காரும் வாங்கவில்லை. காருக்கான கடனும் பெறவில்லை.

விபத்தில் பலி

இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் ரத்தினவேலு உயிரிழந்தார். இதையடுத்து, ரத்தினவேலுவின் வீட்டிற்கு டி.வி.எஸ். கிரெடிட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதன் வக்கீல் ரத்தினவேலுவுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதில் 11.12.2018-ல் ரத்தினவேலு கார் கடன் பெற்றுள்ளதாகவும், 6.4.2019 வரை தவணைமுறை செலுத்தாததால், ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்து 49 தொகையை ஒருவாரத்திற்குள் செலுத்தி குற்ற நடவடிக்கையை தவிர்க்கவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த ரத்தினவேலுவின் மனைவி சின்னதாய், அவரது மகள் கவுசல்யா, மகன்கள் ஜெகதீஸ், வல்லரசு ஆகியோர் தங்களது வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் டி.வி.எஸ். கிரெடிட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவர் மீதும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ரூ.50 ஆயிரம் இழப்பீடு

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். இதில் மனுதாரரின் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியமைக்காகவும், சேவைகுறைபாடு காரணமாகவும் மனுதாரரின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரத்தை தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க டி.வி.எஸ்.கிரெடிட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளருக்கு உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து 8 சதவீதம் வட்டியுடன் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று நீதிமன்ற குழுவினர் தங்களது உத்தரவில் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் 2-வது எதிர்மனுதாரரை விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


Next Story