அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீரென்று தீப்பற்றி எரிந்த கார்
உடுமலையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீரென்று கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
உடுமலையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீரென்று கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கர்ப்பிணி
உடுமலையை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கவிதா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று கவிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் தனது மனைவியை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்.
இதற்காக மணிகண்டன் தனது உறவினரின் காரில் மனைவி கவிதா மற்றும் உறவினர்களை அழைத்துக்கொண்டு பிரசவத்திற்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் அருகே வந்த போது காரின் முன்புற பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.
காரில் தீப்பற்றியது
இதனால் சுதாகரித்துக் கொண்ட மணிகண்டன் உடனடியாக காரை நிறுத்தி விட்டு மனைவி மற்றும் உறவினர்களை அவசரமாக வெளியேற்றினார். இதன் காரணமாக அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அதற்குள் கார் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த உடுமலை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் காரின் முன்பாகம் முழுவதுமாக சேதம் அடைந்தது. மனைவியை பிரசவத்திற்கு அழைத்து வந்த போது அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பு காரில் தீ பற்றிய சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.