வடமதுரையில் தீப்பிடித்து எரிந்த கார்


வடமதுரையில் தீப்பிடித்து எரிந்த கார்
x

வடமதுரையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 47). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். ஜெயக்குமார் தற்போது வடமதுரை மேற்குரத வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை அவர், தனது காரை மேற்குரத வீதியில் நிறுத்திவிட்டு கோழிப்பண்ணைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையிலம் மதியம் 2 மணி அளவில் ஜெயக்குமார் காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கார் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் பக்கத்து வீட்டில் இருந்து மின் மோட்டாரை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கார் மீது பீய்ச்சி அடித்தனர். அதேபோல் மினி டேங்கர் லாரி மூலம் தண்ணீரை கொண்டு வந்தும் கார் மீது ஊற்றினர். பின்னர் ஒருவழியாக காரில் பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் அணைத்தனர். இருப்பினும் காரின் பெரும்பாலான பகுதிகள் தீயில் எரிந்து நாசமானது.

கார் தீப்பிடித்து எரிந்ததும் தீயணைப்பு படை வாகனத்தை எதிர்பார்க்காமல் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், வெயிலில் நிறுத்தி இருந்த போது காரின் 'டேஷ்போர்டு' பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது. கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் வடமதுரையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story