உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிாிழந்தாா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோகுல்(வயது 19), ஏ.சி. மெக்கானிக். இவா் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் சதீசுடன், மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கோகுல் ஓட்டினார்.
உளுந்தூர்பேட்டை நகர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோகுலின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் வேகமாக மோதியது.
வாலிபர் பலி
இதில் கோகுல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சதீசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான கோகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.